பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது. எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணைப்படி அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.
சென்னை பாண்டி பஜாரில் அமைந்துள்ள ரேசன் கடைக்கு ((தியாகராயநகர் -3 )) சென்ற மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் அங்கு அரிசி, கோதுமை, பருப்புகள் போன்றவற்றின் அளவு மற்றும் விலைகள் குறித்து கேட்டறிந்தார். மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் முறையாக உணவு தானியப் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்றும் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
சென்னைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். சென்னை விமான நிலையத்தில் எனக்கு அமோக வரவேற்பு தந்தனர். அதை பார்த்தபோது 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு அதிகளவிலான உறுப்பினர்கள் செல்வது உறுதி என தெரிகிறது. மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி வருவதும் உறுதி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு என்ஐஏ சோதனை நடத்தி பிஎப்ஐ பயங்கரவாத இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதம் நாட்டை பிளவுபடுத்துவதாக உள்ளது. பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது. எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணைப்படி அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில அரசும் பிஎப்ஐ அமைப்பின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மக்கள் அமைதியானவர்கள். ஆனால் இங்கு ஆட்சியில் இருப்போரின் செயல்பாடு வன்முறையையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பிரதமர் நாட்டு முன்னேற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளார். பிரதமரின் திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக இல்லாமல் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது. பாஜக சித்தாந்த ரீதியாக நாட்டை முன்னேற்றுவது பற்றி யோசிக்கிறது. எனவே பிஎப்ஐ அமைப்பை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயற்சி செய்கிறோம்.
தமிழக முதல்வர் இதேபோல் செயல்பட்டால் அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர் . அண்ணாமலை மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அபரிதமாக உள்ளது. ராகுல் காந்தி மக்களை ஒருங்கிணைக்க பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர்களை முதலில் ஒருங்கிணைக்க வேண்டும். காங்கிரசால் தனது கட்சிக்கே தலைவரை உருவாக்க முடியவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தபின் இதுவரை எந்த ஊழலும் நடக்கவில்லை. பயங்கரவாதத்தை முழுவதும் தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.