ராணுவ ஆட்சி வதந்தி: பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 10 நாட்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் அவரை ராணுவம் சிறை பிடித்துள்ளதாகவும், சீனாவில் ராணுவ ஆட்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில் நேற்று அவர் பொதுவெளியில் தோன்றினார்.

சீன அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். சீனாவில் ‛சீன கம்யூனிஸ்ட் பார்ட்டி’ கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் சீனாவின் அதிபராக 2வது முறையாக செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் அவர் 3வது முறையாக பதவியை பிடிக்க திட்டமிட்டுள்ளதா கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீனா பற்றியும், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதன்படி சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் நாட்டில் விமான சேவைகள் முடங்கி உள்ளதாகவும், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள், படங்கள் வெளியாகி உள்ளன. இது அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களாகவே இருந்தன. இருப்பினும் இந்த விபரங்களை யாரும் உறுதி செய்யவில்லை. இதனால் சீனாவில் என்ன நடக்கிறது? என்பதை அறிய மக்கள் பார்வை அந்த பக்கம் திரும்பியது.

இந்நிலையில் தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காட்சியில் பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று சீனா திரும்பி நிலையில் அவர் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் அவர் பொதுவெளியில் காட்சி கொடுத்தார். இதுதொடர்பாக சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கண்காட்சியானது இந்த ஆட்சியின் சாதனைகள் தொடர்பானதாக அமைந்து இருந்தது.

மேலும் இந்த கண்காட்சியில் ஜி ஜின்பிங் பேசியுள்ளார். அவர், ‛‛சீன புதிய அத்தியாத்துடன் வெற்றியை நோக்கி முன்னேற உள்ளது. இதற்கு அனைத்து மக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என அவர் பேசியுள்ளார். மேலும் தனது தலைமையின் கீழ் சீனா அடைந்த வளர்ச்சி, சாதனைகள் பற்றி அவர் விவரித்தார். மேலும் பாதுகாப்பு துறையில் சீனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் அவர் சூளுரைத்தார்.

சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் 16ம் தேதிக்கு பிறகு பொதுவெளியில் இல்லாமல் இருந்தது ஏன்? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் தான், சீனாவுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் அரசு வழிக்காட்டுதல்படி 7 நாட்கள் வரை கட்டாய தனிமையில் இருக்க வேண்டும். அதனடிப்படையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பிறகு ஜி ஜின்பிங் தனிமையில் இருந்திருக்கலாம். இந்த வேளையில் அவரது எதிர்ப்பாளர்கள் வெளிநாட்டில் இருந்தபடி தவறான தகவல்களை பரப்பி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.