விரைவில் தூத்துக்குடியில் டைடல் பார்க்: கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடியில் விரைவில் டைடல் பார்க் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் அகில இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் 40-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி எம்பி பங்கேற்று, சிறந்த தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து, சங்கத்தின் 40வது ஆண்டின் கல்வெட்டை திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் ஒவ்வொரு இளைஞருக்கும், தான் ஒரு தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற கனவு உள்ளது. இன்றைய இளைஞர்கள் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன. ஒரு காலகட்டத்தில் சாதரணமாக இருந்த தூத்துக்குடியை நகரமாக மாற்றி நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கொண்டு வந்திருப்பது நம் முன்னோர்கள், முன்னோடிகள்தான். அவர்களின் உழைப்பு காரணமாக தூத்துக்குடியை தொழில் முதலீட்டாளர்கள் திரும்பி பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் மட்டுமே எல்லா தொழில் நிறுவனங்களும் வரக்கூடாது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்லா தொழில் நிறுவனங்களும் வர வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக முதல்வர் பல்வேறு மாவட்டங்களில் தொழில் நிறுவங்களை கொண்டு வருகிறார். அந்த நோக்கில் ஆசியாவிலேயே முதன்முறையாக பர்னிச்சர் பார்க்கினை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்காக அடிக்கல் நாட்டி உள்ளார். அதேபோல் விரைவில் டைடல் பார்க் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தூத்துக்குடியில் நிறைய தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து நிறைய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் நாம் அனைவருடைய கனவாக இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறை மிகப்பெரிய சவால்களை சந்தித்துள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா தொற்று போன்றவற்றை தாண்டி வெற்றி பெற்று நின்று கொண்டு இருக்கிறோம். அதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கைதான் காரணம். தொடர்ந்து எதற்கும் சளைக்காமல் வெற்றி பெற்றுக் காட்டுவோம் என்ற முனைப்பு உள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.