காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக திக்விஜய் சிங் அறிவிப்பு!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன்(செப். 30) முடிவடைகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ஆனால், கட்சியின் விதிப்படி அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதாலும் அவர் விலக மறுப்பதாலும் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

மேலும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூரும் போட்டியிட உள்ள நிலையில், மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் போட்டியில் களமிறங்க உள்ளார். தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பெற வந்துள்ளதாகவும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், ‘போட்டியிலிருந்து என்னை ஏன் விலக்குகிறீர்கள், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், அனைவருக்கும் உரிமை உண்டு, செப். 30 ஆம் தேதி மாலை தெரிய வரும்’ என்று கூறியிருந்தார்.

இன்னும் ஒருவரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்.

இந்நிலையில் ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்த அசோக் கெலாட் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கெலாட் கூறியதாவது:-

இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த சம்பவம் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நான் முதல்வராக தொடர வேண்டும் என்பதற்காகதான் இவை அனைத்தும் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நான் சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரினேன்.

கொச்சியில் ராகுல் காந்தியை சந்தித்து தலைவர் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினேன். அவர் போட்டியிட மறுப்பு தெரிவித்ததால், நான் போட்டியிடுவதாக் தெரிவித்தேன். ஆனால், ராஜஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில், நான் போட்டியிட போவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என்றார்.