திராவிட மாடல் என்று சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, நாம் பெற்ற பிள்ளைக்கு யாரோ பேர் வைப்பது வேதனையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின்னர் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு வருகை தந்துள்ளார். சென்னையிலிருந்து காலை விமானம் மூலமாக புறப்பட்ட பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது திமுக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-
தரமான சிகிச்சை தரவேண்டும் என்று 350 கோடி ரூபாயில் மருத்துவக்கல்லூரி விருதுநகர் மாவட்டத்தில் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திமுகவினர் திறந்திருக்கின்றனர். நாம பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பேர் வைத்தது வேதனையாக இருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்து பிரம்மாண்டமாக கட்டி அதை நாம் திறக்கமுடியாமல் போய் விட்டது. 7 சட்டக்கல்லூரிகள் கொண்டு வந்தோம். 70க்கும் மேற்பட்ட அரசுக்கல்லூரிகள் கொண்டு வந்தோம், பாலிடெக்னிக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். பல பள்ளிகளை தரம் உயர்த்தி நிறைய மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கு வழி வகுத்தோம். எந்த நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறதோ அந்த நாடு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுத்த அரசு அதிமுக அரசு. உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடு.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகம் பேர் உயர்கல்விக்கு சென்றனர். இதுதான் சாதனை. மூச்சுக்கு முன்னூறு முறை திராவிட மாடல்.. திராவிட மாடல் என்று பேசும் ஸ்டாலின் என்ன சாதனை செய்தார். எல்லாம் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனை. பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, சீருடை, பை, புத்தகம் என பல திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் அதை நிறுத்தி விட்டனர். ஒரு மடிக்கணினி 12 ஆயிரம் ரூபாய், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொடுக்க முடியவில்லை. ஏழை எளிய மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு இலவச லேப் டாப் அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. இன்றைய ஆட்சியாளர்கள் மடிக்கணினி திட்டத்தை நிறுத்தி விட்டனர்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினோம். ஆனால் நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக.,வினர் மாற்றி, மாற்றி பேசுகின்றனர். ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார். அம்மா கிளினிக்கை மூடினர். தற்போது அம்மா உணகத்தையும் மூட இந்த அரசு முயற்சித்து வருகிறது. பொங்கல் பண்டிகை வந்தாலே திமுக அரசு கொடுத்த பரிசு பொருட்கள் தான் நியாபகம் வருகிறது. ஏழை மக்களுக்கு கொடுக்கக்கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்துள்ளனர். அனைத்திலும் கமிஷன், கலெக்ஷன், கரெப்சன்.
பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்கல்வி அமைச்சர், பெண்கள் பஸ்சில் ஓசியில் செல்வதாக கூறுகிறார். அது மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கின்றனர். அதனை கொச்சைப்படுத்துகிறார். இதற்கெல்லாம் லோக்சபா தேர்தலில் மக்கள் திமுக.,விற்கு பாடம் கொடுப்பார்கள். மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.