யோகா பயிற்சிகளும் மனித வாழ்வை முன்னேற்ற கூடிய கல்வி என்ற அடிப்படையில், அதன் கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக ஈஷா அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஈஷா அறக்கட்டளை தரப்பில் கல்வி நிறுவனம் என்ற அடிப்படையில் விலக்கு அளித்து 2020ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு அறிவித்த பிறகும், மாநில அரசால் நோட்டீஸ் அனுப்பபட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனம் என்பது உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒருவரின் வளர்ச்சியை முன்னேற்றமடைய செய்வதாக இருக்க வேண்டும் என்றும், ஈஷா அறக்கட்டளை வளாகத்தை பொறுத்தவரை கல்வி கற்பிக்கும் கல்வி நிலையங்கள், தங்கும் விடுதி ஆகியவற்றிற்கான கட்டடங்கள் மட்டும் அல்லாமல், யோகா வகுப்புகளையும், பயிற்சிகளையும் வழங்கி வருவதாலும் அந்த கட்டங்களுக்கும் கல்வி நிலையம் என்ற அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாதங்கள் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை நாளை வெள்ளிக்கிழமைக்கு (செப்டம்பர் 30ஆம் தேதி) தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.