சீமான், திருமாவளவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஹெச்.ராஜா!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அப்பாவி என்றும், அவருக்கு சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோர் தான் கொம்பு சீவிவிடுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கற்பகவிநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு, தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கேக் வெட்டினார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:-

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் மத்திய அரசு அதை தடை செய்துள்ளது. பல கொலைகள் பயங்கரத்தில் ஈடுபட்ட காரணத்தால் பிஎப்ஐ மற்றும் தொடர்புடைய அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பதும், அதற்கு ஆதரவாக பேசுவதும் தண்டனைக்குரிய குற்றம்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறையிடம் கேட்டுத்தான் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டிஜிபி நீதித்துறைக்கு தலை வணங்க வேண்டும். நீதிமன்றத்திற்கும் ஆர்எஸ்எஸ்க்கும் எதிராக டிஜிபி செயல்படுகிறார். இதுதொடர்பாக மக்களிடமும் முறையிடுவோம்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக விசிக செயல்பட்டுள்ளது. காஷ்மீரில் 24 இந்துக்களை கொன்றேன் என்று அறிக்கை விட்ட யாசின் மாலிக்கை அழைத்து வந்து கூட்டம் போட்டு வன்முறைக்கு துணை போனார் சீமான். அவர் ஒரு தேசவிரோதி. தமிழக அரசு சீமானையும் திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அப்பாவி, எனது நண்பர். அவருக்கு ஒருபுறம் சீமானும், மறுபுறம் திருமாவளவன் கொம்பு சீவி விடுகிறார்கள். இதனால் ஸ்டாலின் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் யாரும் ஆதரவாக செயல்பட அனுமதிக்க கூடாது. தேசவிரோத தீய சக்திகளை தமிழக காவல்துறை கைது செய்யவில்லை. தேசிய புலனாய்வு முகமைதான் கைது செய்துள்ளது. உளவுத்துறை அறிக்கையில் தமிழகத்தை பற்றியும் கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.