ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டு சிறை!

மியான்மர் நாட்டின் ரகசிய சட்டத்தின் கீழ் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மரில் கடந்தாண்டு பிப்வரியில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ஜனநாயக தேசிய கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். தகவல் தொடர்பு சாதனங்கள் சட்ட விரோதமாக இறக்குமதி, கொரோனா கட்டுப்பாட்டுகளை மீறியது, தேசத்துரோக வழக்கு, அரசு நிலத்தை குறைந்த வாடகைக்கு விட்டது, அறக்கட்டளைக்கு வழங்கிய நன்கொடையில் வீடு கட்டியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, தேர்தல் முறைகேடு என ஆங் சான் சூகிக்கு மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் நாட்டின் ரகசிய சட்டத்தை மீறியதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை ராணுவம் முன் வைத்தது. இந்த வழக்கில் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சூகியின் ஆலோசகராக இருந்த சிட்னி மெக்குயர் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ஷான் டனெலிடம் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் அவருக்கும் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.