பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரே தமிழ்நாட்டுக்காரர் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும். நான் மட்டும்தான் தமிழ் நாடு என தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவையாக தெரிவித்தார்.

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ’21-ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாணவிகளை தயாரிப்பது’ என்கிற தலைப்பிலான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்வியில் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணமாக கழிப்பறை இல்லாதது ஆய்வில் தெரியவந்தது. பிரதமர் மோடி அறிமுகம் செய்த ”ஸ்வச் பாரத்” திட்டத்தின் கீழ் பள்ளிகள் தோறும் கழிவறைகள் கட்டப்பட்டது. இதனால் பெண்கள் கல்வியை கைவிடும் சதவிகிதம் குறைந்துள்ளது. பெண்கள் பள்ளிக்கு வந்து சுகாதாரமான முறையில் கல்வி கற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றை நாம் சரி செய்ய வேண்டும்.

பெண்களாக இருப்பதால் நமக்கு கட்டுப்பாடுகளும் உள்ளது. குறிப்பாக ஆடை கட்டுப்பாடு பெண்களுக்கு அவசியமாகும். நாகரீகம் என்பது நாம் உடுத்தும் உடையில் அல்ல, நமது அறிவின் வளர்ச்சி தான் நாகரீகமாகும். மேலும் நமது கலாச்சாரத்தை உலகில் எங்கு சென்றாலும் நாம் கடைபிடிக்க வேண்டும். பெண்கள் அவர்களுக்கென ஒரு குறிக்கோள் வைத்து அதில் முன்னேற வேண்டும். வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் திகழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ராஜராஜன் சோழன் சர்ச்சை குறித்து பேசிய ஆளுநர், கமல்ஹாசனுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை, பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும். நான் மட்டும்தான் தமிழ்நாடு என நகைச்சுவையாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் தான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தெலுங்கானா ஆளுநர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிவடையும் வரை தமிழ் தாய் வாழ்த்து பாடப்படவில்லை. இது சர்ச்சையானது. இதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், எல்லா இடத்திலும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். செமினார் என்பதால் பாடவில்லை என நினைக்கிறேன் என்றார்.

எதுவும் உள் நோக்கத்துடன் நடைபெறவில்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இருக்க வேண்டும். அதை நான் கேட்டேன். அதற்குள் ஆரம்பித்து விட்டார்கள். அதனால் விட்டு விட்டேன் என்று கூறினார். எந்த நிகழ்ச்சி என்றாலும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்றும் கூறினார்.

வன்முறையை இல்லாத அமைதியான சூழல் நிலவ வேண்டும். தமிழகத்தில் கலாசாரத்தை மாற்றும் சூழல் நிலவுகிறது. தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை என்ற விவாதம் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தான் கோவில் அதிகம் உள்ளது. அடையாளங்களை மாற்றி செய்யக் கூடாது. அது மோதலை தான் உருவாக்கும் என்றார்.