இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரிகுறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவித்தார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் கொண்டுவந்த சர்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்டில்’, நிறுவனங்களுக்கான வரி உயர்வு, அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவீத வரிஉயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து பொருளாதாரம் நிலைகுலைந்து, டாலருக்கு நிகரான இங்கிலாந்து பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்தது.
இதற்கிடையே, பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து நிதி மந்திரியாக இருந்த குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். மேலும், புதிய நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பிரதமா் லிஸ் டிரஸ் அறிவித்திருந்த அனைத்து வரிக்குறைப்புகளையும் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் முழுமையாக திரும்பப் பெற்றாா்.