மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முந்தைய அரசின் உத்தரவை திரும்பப் பெறுவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. மேலும், டெல் அவிவ் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவும் புதிதாக அமைந்துள்ள மத்திய-இடதுசாரி அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சா் பென்னி வாங் கூறுகையில், ஜெருசலேமின் நிலைமை குறித்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையில் தீா்வு ஏற்பட்ட பிறகே முடிவு செய்யப்படும். பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகள் கொள்கையை ஆஸ்திரேலியா உறுதியாகக் கடைபிடிக்கிறது. அந்தத் தீா்வை நோக்கிய பயணத்துக்குத் தடையாக இருக்கும் எந்த ஏற்பாட்டையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்றாா் அவா்.
பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வரும் மேற்கு ஜெருசலேம் நகரை தங்களது தலைநகராக இஸ்ரேல் கூறினாலும், டெல் அவிவைத்தான் அந்த நாட்டின் தலைநகராக உலகின் பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்துள்ளன.