தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் 100வது நாளை எட்டிய போது, வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இந்த ஆணையம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தி உள்ளது. அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார். இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்த போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ்நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள்.
மக்கள் தங்கள் அனுபவத்திலிருந்து போராடிக் கொண்டிருந்த போது, பொருத்தமற்ற முறையில் அரசியல் மற்றும் சுயநல நோக்கில் இருந்து 4 காவல்துறையினரை தாக்கிய பிறகுதான் காவல்துறையினர் திருப்பி தாக்கினார்கள் என்று பேசிய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிற பிரபலங்கள் எதிர்காலத்தில் இத்தகைய தேவையற்ற கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு என்று மட்டும் இந்த சம்பவத்தை தமிழக அரசு தனித்துப் பார்க்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களை அப்பட்டமாக மேற்கொண்டு, சட்ட விரோதமாகவே நடந்துகொண்டு வந்திருக்கிறது அந்த நிறுவனம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.