ரஷ்யாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மோடி குறித்து பேசியது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த வால்டாய் விவாதக் குழுவின் (Valdai Discussion Club) வருடாந்திர நிகழ்வில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொண்டார். அதில் அவர் இந்தியப் பிரதமர் மோடி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது. புடின் பேசியதாவது:-
பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில் இருந்து வெளியே வந்து படிப்படியாக முன்னேறி இந்தியா தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் உலகமே மதிக்கத்தக்க நாடாக மாறியிருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு இந்தியர்கள் மீது மதிப்பு அதிகரித்துள்ளது. இதில் பிரதமர் மோடியை பற்றி கூறியே ஆக வேண்டும். மோடியின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை நிச்சயம் பாராட்டுக்குரியது. இவரது தலைமையில் இந்தியாவில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி ஒரு சிறந்த தேசப்பற்றாளர். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி நல்ல அடித்தளம் போட்டியிருக்கிறார். எதிர்காலம் இந்தியாவில் கைகளில் என்று சொல்லும் அளவிற்கு செயல்பட்டு வருகிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது மிகவும் பெருமைப்படும் விஷயமாக உள்ளது.
இந்தியா – ரஷ்யா இடையிலான நல்லுறவு சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது. இருதரப்பிற்கும் இடையில் எந்தவொரு நெருக்கடியான விஷயங்களும் இல்லை. ஒருவருக்கொருவர் முழு ஒத்துழைப்பு வழங்கி இன்று வரை சிறப்பாக நடைபோட்டு கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலை வருங்காலத்திலும் தொடரும் என்று நம்புகிறோம். அதுமட்டுமின்றி இந்திய விவசாயத்தில் உரத்தின் பங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ரஷ்யாவின் பங்களிப்பும் இருக்கிறது. சமீபத்தில் உரம் குறித்து முக்கிய கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்திருந்தார். அதாவது, உரத்தின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் இந்திய பயனடைய வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நாங்கள் உர ஏற்றுமதியை 7.6 மடங்கு அதிகரித்திருக்கிறோம். விவசாயம் சார்ந்த வர்த்தகம் மட்டும் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றின் மூலம் இந்திய பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.