டுவிட்டருக்கு போட்டியாக முன்னாள் சிஇஓ தொடங்கும் ப்ளுஸ்கை!

டுவிட்டரை போன்று ‘ப்ளுஸ்கை’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தொடங்க உள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், ரூ.32.52 லட்சம் கோடிக்கு வாங்கி உள்ளார். இனிமேல், டுவிட்டர் சுதந்திரமாக செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், டுவிட்டருக்கு போட்டியாக ‘ப்ளுஸ்கை’ என்ற புதிய சமூக வலைதளத்தை உருவாக்க, டுவிட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான (சிஇஓ) ஜாக் டோர்சி முடிவு செய்துள்ளார்.

டுவிட்டரை உருவாக்கிய நிறுவனர்களில் இவரும் ஒருவர். கடந்த 2021ம் ஆண்டு, நவம்பரில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய டோர்சி, இந்தாண்டு மார்ச்சில் டுவிட்டரின் நிர்வாக குழுவில் இருந்தும் விலகினார். தற்போது, ‘பீட்டா’ வகையில், இவருடைய ப்ளுஸ்கை வெளியாகி வருகிறது. விரைவில் இதை முழு அளவிலான பயன்பாட்டுக்கு கொண்டு வரப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

டுவிட்டரிலும் ‘ப்ளு’ என்ற பெயரில் சேவை அளிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி இதை பயன்படுத்த வேண்டும். விருப்பப்படுபவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தும் வாய்ப்பு தற்போது உள்ளது. டுவிட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க், லாப நோக்கத்துக்காக இந்த ‘ப்ளு சேவை’யை முழு அளவில் அளிக்க திட்டமிட்டுள்ளார்.