திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி திமுகவின் முகமாக அமைச்சர் கே.என்.நேரு கோலோச்சிய காலத்தில் அவருக்கு அனைத்துமாக செயல்பட்டவர் அவரது சகோதரர் கே.என்.ராமஜெயம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2012-ம் ஆண்டு அதிகாலையில் நடைபயணம் சென்ற போது மர்மநபர்களால் ராமஜெயம் கடத்தப்பட்டார். பின்னர் திருச்சி அருகே கல்லணை சாலையில் கை கால்கள் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டு கிடந்த நிலையில் ராமஜெயத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ராமஜெயத்தின் படுகொலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமஜெயம் படுகொலை வழக்கானது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சி அமைந்த உடன் ராமஜெயம் படுகொலை வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அந்த 12 ரவுடிகளுக்கும் போலீசார் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து மோகன்ராம், தினேஷ் ,நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம் , சிவ குணசேகரன் ஆகியோர் திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் இன்று ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை வரும் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பின்னர் மோகன் ராம் என்பவரது வழக்கறிஞர் அலெக்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்ற அனுமதியை எஸ்.பி தான் கோர முடியும் என உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது. அதற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் டி.எஸ்.பி தான் அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழிக்காட்டலுக்கு எதிரானது. எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி. மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டி வரும். 7 ஆம் தேதி மீண்டும் அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஏன் அவர் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை? ராமஜெயம் மது அருந்தும் பழக்கம் இல்லாதவர் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது என சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே முதலில் அவர் குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராமஜெயம் கொலை வழக்கில் இன்று சந்தேகப்படும் என்று அறியப்பட்ட 12 ரவுடிகள் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு திருச்சி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடும் பட்சத்தில் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மேலும் சூடுபிடிக்கும். 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் விரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.