தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ‘கோமாளி’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், அவரைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ம் தேதி அதிகாலை ஒரு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜமேஷா முபின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் பல கிலோ எடைக்கொண்ட வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும், 2019-ம் ஆண்டு என்ஐஏ அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது முதலாகவே, இதை ஒரு தீவிரவாத சதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகிறார். மேலும், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்த சூழலில், கடந்த திங்கள்கிழமை அன்று கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு அண்ணாமலை சென்றிருந்தார். அங்கு அவரும், பாஜக நிர்வாகிகளும் கந்த கஷ்டி கவசம் பாடினர்.
இந்த சூழலில், கோவையில் மின்துறை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கலந்துகொண்டார். அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பாக அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி, “ஈஸ்வரன் கோயிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடிய கோமாளியை யாராவது பார்த்ததுண்டா” என கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருமுறை கூட கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தது இல்லை போலிருக்கிறது. இந்த கோயிலில் சண்முக சுப்பிரமணிய சுவாமி சன்னதியும் அமைந்துள்ளது. இந்த கோயில் முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் நடப்பதும் வழக்கம். இது கூட தெரியாமல் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாடியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேசி இருக்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலை மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவரை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும். அவரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.