ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா தஞ்சாவூரில் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்ததாக கல்வெட்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு ஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜ ராஜ சோழனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் விழா கொண்டாடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் ராஜ ராஜ சோழனின் பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்! அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்கள். மேலும், அவரது ஆட்சியில் ‘தமிழகம்’ ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ராஜ ராஜ சோழனின் சிலைக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 48 விதமான வாசனை திரவியங்களால் தஞ்சை பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
முதலில் அரண்மனை தேவஸ்தானம் நிஷாந்தி மற்றும் ஆறுமுகம் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். தொடர்ந்து யானை மீது திருமுறைகள் வைக்கப்பட்டு 4 ராஜவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடியார்கள், ஓதுவார்கள் திருமுறை பாராயணம் பாடியப்படி வீதி உலா வந்தனர். அப்போது பழங்கால கொம்பு உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தபடி வந்தனர். இதில் பெரியகோவில் உருவம் பொறித்த பிரமாண்ட மாதிரி அரங்கம் வாகனத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவில் பின்தொடர்ந்து வந்தது.
இதையடுத்து பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சதயவிழாக்குழு தலைவர் து.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கம், கட்சிகள், அமைப்பு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஏராளமானோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து பெரிய கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடந்த இந்த பேரபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதியம் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. மாலையில் மங்கள இசை, குரலிசை நிகழ்ச்சி, திருமுறை பண்ணிசை அரங்கம், திருநெறிய தமிழிசை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சதயவிழாவை முன்னிட்டு பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன் சிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.