காற்றுமாசு காரணமாக டெல்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுடெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் டெல்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்படும்வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால் டெல்லி காற்றுமாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், புதுடெல்லியில் மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகனப் பதிவெண் முறையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக நாளை முதல் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கான வெளிப்புற செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முழுவதும் காற்றின் தரம் ‘அபாயம்’ என்ற நிலையில் நீடித்துள்ளது. சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவில் பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லி அதனை சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 400 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லி அதனை சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. டெல்லியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு குறித்த மனுவை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று தலைமை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வைக்கோல் உள்ளிட்ட விவசாய கழிவு பொருட்கள் வெட்டவெளியில் பன்மடங்கு எரிக்கப்படுவதால் அண்டை பகுதியான டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.