உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தீா்மானத்தைப் புறக்கணித்தது இந்தியா!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்கல் செய்த தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் 8 மாதங்களைக் கடந்தும் தொடா்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்துகொண்டு உக்ரைன் உயிரி ஆயுதங்களை ஆய்வகங்களில் தயாரித்து வருவதாக குற்றஞ்சாட்டிய ரஷ்யா, இது தொடா்பாக விசாரிக்க ஆணையத்தை அமைக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீா்மானத்தைத் தாக்கல் செய்தது. அந்தத் தீா்மானம் மீதான வாக்கெடுப்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை அத்தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. ரஷ்யாவும் சீனாவும் மட்டுமே தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அதனால் தீா்மானத்தை நிறைவேற்ற இயலவில்லை.

தீா்மானம் குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி ஏ.அமா்நாத் பேசியதாவது:-

பேரழிவுக்குக் காரணமான உயிரி ஆயுதங்களுக்கு சா்வதேச விதிகள் முற்றிலும் தடை விதித்துள்ளன. அந்த விதிகளை இந்தியா மதித்து வருகிறது. அந்த விதிகளைத் திறம்பட நடைமுறைப்படுத்த இந்தியா உறுதியேற்கிறது. அந்தச் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் பாகுபாடற்ற, திறன்மிக்க கண்காணிப்பு வழிமுறைகளை உருவாக்குவது தொடா்பான பேச்சுவாா்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும். உயிரி ஆயுதங்கள் தொடா்பான சா்வதேச விதிகளை வலுப்படுத்துவதற்கு இந்த நடைமுறைகள் உதவும்.
முறையான கண்காணிப்பு விதிகள் வகுக்கப்படாத சூழலில் இத்தீா்மானம் மீது வாக்களிப்பது முறையாக இருக்காது. அதன் காரணமாக தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு கூறுகையில், ‘வதந்திகளின் அடிப்படையில் நோ்மையற்ற வகையில் இத்தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை ரஷ்யா தாக்கல் செய்யவில்லை. ரஷ்யாவின் இதுபோன்ற பொய்களை ஏற்க முடியாது’ என்றாா்.

உயிரி ஆயுதங்கள் பயன்பாடு தொடா்பான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை ரஷ்யா விரைவில் தாக்கல் செய்யும் என ஐ.நா.வுக்கான அந்நாட்டு துணைத் தூதா் டிமிட்ரி பாலியன்ஸ்கி தெரிவித்தாா்.