குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய இணைப் பொதுச்செயலாளர் இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டார்.
குஜராத் சட்டசபை தேர்தல் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு டிச., 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதல் கட்டமாக, 89 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கவுள்ளது. பதிவான ஓட்டுகள், டிச., 8ல் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சி புரியும் ஆம்ஆத்மி கட்சியும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் குஜராத் முதல்வர் வேட்பாளரை இன்று (நவ.,4) அந்த கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், புதுடெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகம் செய்தார். அதன்படி, இசுதான் காத்வி என்பவரை குஜராத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. இவர் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த நிலையில் 2021ல் ஆம்ஆத்மியில் சேர்ந்தார். தற்போது அக்கட்சியின் தேசிய இணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.