பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவு: அமைச்சர் நாசர்

பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:-

பசும்பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி 35 ரூபாயாகவும், எருமைப்பால் விலையை 3 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயாகவும் மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள். இந்த விலையேற்றத்தால் விற்பனை விலையில் சாமானிய மக்களை சென்றடையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறை கொழுப்பு பால் கொண்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதே 46 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும். வணிக ரீதியாக வாங்கும் நபர்களுக்கு மட்டும் 12 ரூபாய் உயர்த்தி 48க்கு பதிலாக 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

அதிக கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்கள் டீ கடைகள், ஓட்டல்களில் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் தயிர் தயாரிக்கவும் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு இந்த பால் தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் விலையேற்றம் செய்துள்ளோம். இதே வகையிலான வெளிமாநில தனியார் பால் 70 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது.

ஆரஞ்சு நிற பால் பாக்கெட்களை 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்திலும் பால் விலை உயர்த்தப்பட்டது. அதை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ரூபாய் வரை குறைத்து நடவடிக்கை எடுத்தார். தற்போது தமிழகத்தில் தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவாக தான் இருக்கிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இந்நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களுக்கு பயன் தர வேண்டும் என்பது சரியானது. அதே சமயம் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் கருதி பால் விலையை உயர்த்தாமல் இருந்தால் தான் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பயன் தரும். பால் கொள்முதல் விலை உயர்வால், ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல், விற்பனையில் ஏற்படும் செலவை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும். அதாவது கொள்முதல் விலையை ஈடுசெய்ய மாற்று வழியில் பொருளாதாரத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர அன்றாட அத்தியாவசிய தேவையாக இருக்கின்ற பால் விலையை உயர்த்தக்கூடாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விட்டு, இப்போது பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்படும் என்ற அறிவிப்பால் பொது மக்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை தொடர்ந்து தற்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தான் தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள். எனவே தமிழக அரசு ஆவின் பால் பாக்கெட் விலையை உடனடியாக திரும்ப பெற முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.