இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மிக மோசமான கொடுங்கோலன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தம்மிடம் தெரிவித்ததாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 50நாட்களுக்கும் மேலாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. தற்போது தெலுங்கானாவில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்தியின் இந்த பயணத்தில் ஹைதராபாத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யின் மகனும் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோவும் இணைந்து கொண்டார். ராகுல் காந்தியுடனான இந்த பயணத்தின் போது இருவரும் பகிர்ந்து கொண்ட விவரங்களை தமது சமூக வலைதளத்தில் துரை வைகோ வெளியிட்டுள்ளார். அதில் துரை வைகோ கூறியுள்ளதாவது:-
ஹைதராபாத்தில் ராகுல் தொடங்கிய பயணத்தில் பங்கேற்று, நடைபயண நாயகர் இயக்கத் தந்தை வைகோ சார்பிலும், மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பிலும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். காலை 6 மணிக்கு தொடங்கி 8 மணி வரை 2 மணிநேரம் ராகுல்காந்தி அவர்களுடன் 9 கி.மீ நடைபயணமாக சென்றேன். அப்போது, கிட்டத்தட்ட அரை மணிநேரம் அவருடன் உரையாடிக்கொண்டே வந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் உடன் வந்தார்.
காலை 8 மணி வரை தொடர்ந்த நடைபயணம் முடிந்த பிறகு, ராகுல்காந்தியும், நானும் காலை உணவருந்தினோம். ராகுல்காந்தி ஐந்து நிமிடத்தில் காலை உணவை முடித்துக் கொண்டார். அதன்பிறகு, அவருடன் 45 நிமிடங்கள் உரையாடிக்கொண்டு இருந்தேன். என்னைப் பற்றியும், நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு செய்துகொண்டு இருந்த பணிகளைப் பற்றியும் விசாரித்தார். வைகோ உடல்நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். தமிழக அரசியல் நிலவரம், தேசிய அரசியல் உள்ளிட்டவைகள் குறித்து உரையாடினோம்.
தற்போது, உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தி வரும் வலதுசாரி அரசியலின் பேராபத்து குறித்து, எனது கருத்தை அவரிடம் தெரிவித்தேன். வலதுசாரி அரசியலை வீழ்த்த வியூகம் வலதுசாரி அரசியலை வீழ்த்துவதற்கு நடைமுறையில் உள்ள சவால்கள் குறித்து நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். கடந்த பத்து வருடங்களில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்ததற்குப் பிறகு, வலதுசாரி அரசியல் கட்சிகள் வேகமாக வளர்ந்து உள்ளன. நம்மை பொருத்தவரை நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை, வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம். ஆனால், வலதுசாரிகள் சாதி, மத உணர்வுகளை மக்களிடம் தூண்டி அதன் மூலம் வெற்றி பெறுகின்றார்கள். அவர்களை வீழ்த்துவது ஒரு சவாலான பணி என்று அவரிடம் தெரிவித்தேன்.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்சே குறித்து பேச்சு எழுந்த போது, அவர் மிக மோசமான கொடுங்கோலன் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். உடனே அவரிடம் கைகுலுக்கி அவரது கருத்தை நானும் ஆதரித்தேன். பிரேசில் தேர்தலில் போல்சார்னோவின் தோல்வி குறித்து எனது கருத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். உலகம் முழுவதும் ஹிட்லராக இருந்தாலும், இராஜபக்ஷேவாக இருந்தாலும், ட்ரம்பாக இருந்தாலும், போல்சர்னோவாக இருந்தாலும் வலதுசாரி சிந்தனை உடையவர்கள், இனவாத, மதவாத அரசியலை முன்னெடுத்தவர்கள் வீழ்ந்து போன வரலாறை ராகுல்காந்தி என்னிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தாலும் கடைசி நம்பிக்கையாக தகர்க்க முடியாத கற்கோட்டையாக தெற்கே தமிழகம் தான் இருக்கிறது என்று, ராகுல்காந்தி நம்பிக்கையுடன் தெரிவித்தார். தந்தை பெரியாரை போன்றே பகுத்தறிவு கருத்துக்களை அவர் காலத்திற்கு முன்பே பரப்பி வந்த சிந்தனையாளர்கள் குறித்தும் ராகுல்காந்தி என்னிடம் பகிர்ந்து கொண்டார். அண்ணல் காந்தியார் தொடங்கி நாட்டின் ஒற்றுமைக்காக பல தலைவர்கள் நடைபயணம் சென்று மக்களை அணி திரட்டி இருக்கின்றார்கள். அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள். இன்று, மதவாத சக்திகள் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து பிளவுபடுத்தி வரும் நிலையில், இந்திய நாட்டில் எட்டுத் திக்கிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் தலைவராக, நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வரும் காங்கிரஸ் பேரியக்கத்தின் நம்பிக்கைக்குரிய தலைவர் ராகுல்காந்தி ‘ஒற்றுமை பயணம்’ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்! அவரது முயற்சியும், நடைபயணத்தின் குறிக்கோளும் வெற்றி பெறட்டும். இவ்வாறு துரை வைகோ கூறியுள்ளார்.