கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சி: அமைச்சர் சேகர்பாபு!

அமைதி ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சிப்பதாக தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆர்.கே. நகர், கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்வர் நிவாரணப் பணிகளை முழுவேகத்தில் முடுக்கிவிட்டதன் காரணமாக 98 சதவிகிதம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இன்னும் ஒரு சில இடங்களில் இன்று மதியத்திற்குள் முழுவதுமாக தேங்கி நிற்கின்ற தண்ணீர் அகற்றப்பட்டு மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சியை சென்னை மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும், நீர்வளத்துறையும், பொதுப்பணித்துறையும், தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

மழைநீர் தேங்கியிருந்து வடிந்த பகுதிகளில் கழிவுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் எனும் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரிலும் சென்னை பெருநகரில் 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. திமுகவினரும் மக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் 9ஆம் தேதி மழை எதிர்பார்க்கப்படும் சூழலில் அதற்குண்டான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும். மண்டலவாரியாக கண்டறியப்பட்டுள்ள மழைநீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளோம்.

ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. தமிழ்நாட்டில் அமைதியாக, ஒற்றுமையாக வாழும் மக்களிடையே ஏதாவது வழியில் கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலம் திமுக ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் இப்படிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தடைக்கல்லாக இருப்பார். தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைப்பதற்கு எந்த நடவடிக்கையையும் முதல்வர் மேற்கொள்வார். அமைதி ஊர்வலம் என்கிற பெயரில் வன்முறையை ஏற்படுத்த முயலும் நிலையை ஊடகங்கள் தோலுரித்துக் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது சென்னை பெருநகர மேயர் ப்ரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் எபிநேசர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.