நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக என நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
அதிமுகவின் 51வது ஆண்டு துவக்க விழாவை ஓட்டி நாமக்கல் மாவட்டத்தில் பொம்மைக்குட்டைமேட்டில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பழனிசாமி பேசியவதாவது:-
அதிமுக கட்சி உடையவில்லை ஒன்றாக இருக்கிறது. கட்சியை உடைக்க நினைத்த ஸ்டாலினின் கனவு நிறைவேறவில்லை. அதிமுகவை வீழ்த்துவோம் என்ற ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அராஜகத்தில் அட்டூழியத்தில் ஈடுபட்டதுதான் திமுக. நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக. எத்தனை வழக்குகளை போட்டாலும் அத்தனையையும் தவிடு பொடியாக்கி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
அதிமுகவில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்த திமுக நினைக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும். அரசியல் ரீதியாக நம்மை எதிர்க்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறமாக வந்து செயல்படுகிறது.
அதிமுக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக ஆட்சியில் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மருத்தவமனை கொண்டு வரப்பட்டது. நெடுஞ்சாலை, புறவழிச்சாலை பணிகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டன.
திமுக அரசு அதிமுகவை பற்றி அவதூறு பரப்பி வருகிறது. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதே திமுகவின் சாதனை. அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக மூன்று, நான்கு பிரிவுகளாக உடைந்திருக்கிறது என்று கூறுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த கூட்டத்தை ஸ்டாலின் டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இந்தக் கட்சி ஒன்றாகத்தான் இருக்கிறது, அதற்கு இந்த நாமக்கல் கூட்டமே சாட்சி. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், நீட் தேர்வு ரத்துக்கான ரகசிய திட்டம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்கள் ஆனால் அது என்ன ஆனது? தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன, எந்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை.
மேலும், பெண்களுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தனர். ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதன் நிலை என்ன. அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், முதியோர் உதவி தொகை, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், மினி கிளினிக் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தி விட்டது. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்றார்கள் ஆனால் அதையும் செயல்படுத்தவில்லை ஆசிரியர்களையும் கோரிக்கைகளையும் கைவிட்டு விட்டனர்.
திமுகவால், அதிமுகவை எதிர்க்க முடியாத நிலை வரும் போதெல்லாம் அவர்கள் நம் மீது வழக்கு போடுவதுதான் தொடர்கதையாக இருக்கிறது. அன்று முதல் இன்று வரை அதைத்தான் கடைபிடிக்கிறார்கள். நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பு, திரானி இல்லாத கட்சி திமுக. அரசியல் ரீதியாக நம்மை அவர்கள் எதிர்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு கொல்லைப்புறத்தின் வழியாக நுழைந்து நம்மை வீழ்த்தப் பார்க்கிறார்கள். அது நிச்சயமாக ஒருபோதும் நடக்காது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே, எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் தினந்தோறும், உங்கள் ஆட்சியின் அவலங்களை நாட்டு மக்களுக்கு தொழில்நுட்ப நிர்வாகிகளின் உதவியோடு கொண்டு சேர்த்து வருகிறார்கள். நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும், அத்தனையும் தவிடுபொடியாக்கி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். காற்றுக்கு எப்படி தடை போட முடியாதோ, அதுபோல அதிமுக ஆட்சிக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாது.
முதல்வர் ஸ்டாலினின் அதிகாரம் மற்றும் மிரட்டல் காரணமாக, ஊடகங்களையும், பத்திரிகைகளையும் மிரட்டி அவதூறு செய்தியை பரப்பி வருகின்றனர். அதிமுகவுக்கு எந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், சக்தியும் இருக்கிறது என்பதை இன்று நடைபெறும் கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும், அதிமுகதான் வெல்லும் என்பதற்கு சாட்சியாக்தாதான் நாமக்கல்லில் நடைபெறும் இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறேன். இவ்வாறு பேசினார் எடப்பாடி பழனிசாமி.