நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமான இடம். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்கின்ற, சுட்டிகாட்டுகின்ற உரிமை இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, நம்மை ஆண்ட மன்னர்களால், முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. திருக்கோயில் வருமானம் குறித்து கணக்கு கேட்கும் போது பதில் சொல்வது தீட்சிதர்களின் கடமை. கோயிலின் உள்ளே மானாவாரியாக இஷ்டத்துக்கு கட்டடங்களை எழுப்பி இருக்கிறார்கள். இந்து சமயஅறநிலையத்துறையில் பணி நியாயத்தை நோக்கி உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்வதை யாரும் தடுக்கவில்லை. தீட்சிதர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். சிதம்பரம் நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமான இடம். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்கின்ற, சுட்டிகாட்டுகின்ற உரிமை இந்துசமய றநிலையத்துறைக்கு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல் செய்யவில்லை. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.