அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் பங்கேற்றதற்கு பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமி, மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் தலைமைச் செயலர் பதவி விலக வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ரவி தொடந்து தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி, பா.ஜ.,வின் ஏஜென்டாக செயல்படுகின்றார். அதே போல் புதுச்சேரி பொறுப்பு கவர்னரான தமிழிசை, முதல்வரின் வேலைகளை செய்து வருகிறார். அவர் தயவு செய்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும். இருவரும் அரசியல் செய்ய விரும்பினால் கவர்னர் பதவியை ரஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்ய வேண்டும்.
புதுச்சேரிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் முருகன் அவர் பொறுப்பு வகிக்கும் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தலாம். ஆனால் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த அவர் ஒன்றும் உள்துறை அமைச்சர் அல்ல. அந்த ஆய்வுக் கூட்டத்தில் பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன் பங்கேற்றுள்ளார். தலைமை செயலகத்தில் நடந்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கட்சி தலைவரை அனுமதித்தது யார்? யார் அந்த அதிகாரத்தை அளித்தது என்ற கேள்வி எழுகிறது. இது மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற முருகன் தான் எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது.
அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கட்சித் தலைவர் கலந்து கொண்டதற்கு மத்திய அமைச்சர் முருகன், முதல்வர் ரங்கசாமி, தலைமை செயலர் ராஜிவ் வர்மா ஆகியோர் தான் பொறுப்பு.
இந்த விவகாரத்தில் ரகசியகாப்பு பிரமாணத்தை மீறியதற்காக மத்திய அமைச்சர் முருகன் பதவி விலகவேண்டும். தலைமைச் செயலரை பதவி நீக்கம் செய்யவேண்டும். முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரங்கசாமி இருந்தாலும் அவர் போட்டிருக்கும் சட்டை பா.ஜ.,வுக்கு சொந்தம். அவர் பா.ஜ.,விற்கு அடிமையாகிவிட்டார். புதுச்சேரி மாநிலத்தில் மதுபான ஆலை வருவதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் ரூ. 90 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறிய புகாருக்கு முதல்வர் ரங்கசாமி இதுவரை பதில் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.