டுவிட்டர் நிறுவனத்தை தன்வசமாக்கியுள்ள அமெரிக்க செல்வந்தர் எலான் மஸ்க், கூடுதல் செலவீனங்களை எதிர்கொள்வதற்காக 32,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
கடந்த மாதம் டுவிட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கிய டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கினார். அத்துடன் செலவீனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுமார் 50 சதவீதம் அளவுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையில் மஸ்க் ஈடுபட்டார். உலகம் முழுவதும் டுவிட்டர் ஊழியர்கள் 4 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான பணி பலன்கள் மற்றும் இதர செலவீனங்களை எதிர்கொள்ளும் விதமாக 1 கோடியே 95 லட்சம் டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 32,000 கோடி ரூபாய் ஆகும். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் மீதே அதிகம் கவனம் செலுத்தி வருவதால் சமீப காலமாக அவரது கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் 32,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை அவர் விற்றிருப்பதால் டெஸ்லா நிறுவன பங்கு மதிப்பு மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.