நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் பலி!

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி நேபாள தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவானது. நேபாள நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் டோடி மாவட்டத்தின் உள்ள வீடு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர்.

நேபாள எல்லையை ஒட்டிய உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகருக்கு தென்கிழக்கே 90 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி, குருகிராம், காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் தூக்கித்தில் இருந்து எழுந்துள்ளனர்.