சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் கார் சிலிண்டர் வெடித்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அங்கு நாட்டு மருந்துகள் கைப்பற்றப்பட்டன, அது போல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகளும் அவருடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை உக்கடம் போலீஸார் விசாரித்து வந்த நிலையில் முபின் வீட்டில் சோதனையில் கிடைக்கப்பட்ட தகவல்களை வைத்து அந்த வழக்கானது என்ஐஏ அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவையில் மட்டும் 20 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் உக்கடம், கோட்டைமேடு, பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையின் பேரில் சென்னை மண்ணடியில் காவல் துறை சோதனை நடத்தியது. சென்னையில் மண்ணடி, புதுப்பேட்டை, பெரம்பூர் , ஜமாலியா உள்ளிட்ட 5 இடங்களில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தமிழக போலீஸார் சென்னையில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கொண்டு சென்னையில் மக்களுடன் மக்களாக கலந்திருந்ததும் தெரியவந்தது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் இருக்கும் நபர்கள் குறித்த பட்டியலை தமிழக காவல் துறை தயார் செய்து வருகிறது. அது போல் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.