ஜாபர் சேட் மனைவியின் சொத்துகள் அமலாக்கத் துறையால் பறிமுதல்!

தமிழக வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதை விற்பனை செய்து சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவியின் சொத்துகள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துகளும் பறிமுதலாகி இருக்கிறது.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய ஆட்சி அமையும் போது முந்தைய ஆட்சிக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து தூக்கி அடிக்கப்படுவது வழக்கம். அப்படி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அதிகாரவர்க்கத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர்தான் ஜாபர் சேட். 2011-ல் அதிமுக ஆட்சியில்தான் வீட்டு வசதி வாரிய முறைகேடு தொடர்பாக ஜாபர் சேட் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. அப்போது ஜாபர் சேட்டுக்கு ஆதரவாக மறைந்த முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர் தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. ஆனால் தற்போதுள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணி புரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம்? அது தவறல்லவா? அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம் தான்! எனவே உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பழி வாங்கும் அஸ்திரம் பாய்ந்துள்ளது. இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர்? அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்? என ஆவேசமாக கூறியிருந்தார்.

கருணாநிதியை டென்ஷனாக்கும் அளவுக்கு ஜாபர் சேட் மீது போடப்பட்ட வழக்கு என்பது, வீட்டு வசதி வாரியத்தில் சமூக சேவகர் என்ற பெயரில் ஜாபர் சேட் மனைவி நில ஒதுக்கீடு பெற்றார். அப்போது அமைச்சராக இருந்தவர் இன்றைய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி. அப்படி நிலம் பெற்ற ஜாபர் சேட் மனைவி, அதனை விற்பனை செய்தார் என்பது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு. இப்படி விற்பனை செய்ததில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் ஜாபர்சேட் மனைவி என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு. இதில் ஜாபர் சேட் மனைவியுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டிருப்பவர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சொத்துகள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துகளும் பறிமுதலாகி இருக்கிறது.