மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை!

சென்னையில் பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷாவை, அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த அவர், சில நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். அங்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகள் அமித்ஷாவிற்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அங்கு அமித்ஷா தலைமையில் பாஜ., மையக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், அண்ணாமலை, பாஜ., மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தல் வியூகம் குறித்தும், அ.தி.மு.க., கூட்டணியில் கேட்டு பெற வேண்டிய தொகுதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை கூறியதாவது:-

தமிழக மக்களுக்கு பாஜக மீது அன்பு பெருகி வருகிறது. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது நெகிழ்ச்சியான தருணம். தமிழக மக்களின் மீது பிரதமர் மோடி எல்லையற்ற பாசம் வைத்துள்ளனர். கொட்டும் மழையில் பெண்கள் கைக்குழந்தையுடன் காண வந்தது பிரதமரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. காசி சங்கமம் குறித்து திண்டுக்கல்லில் பிரதமர் தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வாரணாசிக்கு தமிழர்கள் 19ம் தேதி வரும்போது வரவேற்க நான் கட்டாயம் இருப்பேன் என பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை எங்களுக்கு ஊக்கமாக இருந்தது. தலைவர்களை அமித்ஷா உற்சாகமூட்டிவிட்டு சென்றிருக்கிறார். பாஜக வளர்ச்சி, தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் ஆலோசனை நடைபெற்றது. தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசவில்லை. மருத்துவப் படிப்பை தாய்மொழியில் படிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார். தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை படிக்க 1350 இடங்கள் உள்ளன. ஆனால் பொறியியலில் வெறும் 50 மாணவர்கள் தான் தாய்மொழியில் படிக்கின்றனர். தாய்மொழியான தமிழ் மொழியை மெருகேற்ற வேண்டும் என அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார். நேற்று டுவிட்டரில் ‘வணக்கம் மோடி’ என்ற ஹாஷ்டேக் அதிகளவில் பகிரப்பட்டது. 14 லட்சம் பேர் பிரதமரை வரவேற்று டுவிட்டரில் பகிர்ந்தனர். கட்சியில் யாரையும் இன்று இணைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.