மாநில அரசின் முடிவுகளில் இடையூறு செய்வதை இனியாவது ஆளுநர் நிறுத்த வேண்டும்: கமல்ஹாசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனைப் போல 6 தமிழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்தாவது மாநில அரசின் முடிவுகளில் இடையூறு செய்வதை இனியாவது ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் 6 தமிழரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் தமிழக அமைச்சரவை முடிவு, சட்டசபை தீர்மானத்தின் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பின்னடைவு என்றும் தமிழக கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டிருந்தால் அறுவர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும். மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்சநீதின்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.