ஒழுங்கா வேலை செய்யாவிட்டால் டுவிட்டர் திவாலாகிவிடும்: எலான் மஸ்க்!

ஒழுங்காக வேலை செய்து, கம்பெனி வருமானத்தை அதிகமாக்கவில்லை என்றால் டுவிட்டர் திவால் ஆவதை யாராலும் தடுக்க முடியாதென தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் உரிமையாளரும், உலகின் நம்பர்-1 பணக்காரருமான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்தே அதிரடியான நடவடிக்கை மேற்கொள்கிறார். இந்நிறுவனத்தை வாங்க அவர் வங்கியில் பல கோடி கடன் வாங்கி உள்ளார். ஓராண்டிற்கு தோராயமாக வட்டி மட்டுமே அவர் ரூ.10,000 கோடியை கட்ட வேண்டி உள்ளது. இதனால் செலவு குறைப்பு நடவடிக்கையாக டுவிட்டரில் 50 சதவீத ஊழியர்களை, அதாவது 3,500க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்கினார்.

இந்நிலையில், டுவிட்டரை வாங்கிய பிறகு முதல் முறையாக அவர் தனது ஊழியர்களிடம் இமெயில் மூலமாக பேசி உள்ளார். அந்த இமெயிலில் மஸ்க், ‘‘நிறுவனத்தின் வருவாயை பெருக்க ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும். இனி வீட்டிலிருந்து வேலை செய்யக் கூடாது. ஒர்க் ப்ரம் ஹோம் ரத்து செய்யப்படுகிறது. அனைவரும் அலுவலகத்திற்கு கட்டாயம் வர வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் இல்லாத பட்சத்தில் அலுவலகத்திற்கு வர முடியாதவர்களின் ராஜினாமா ஏற்கப்படும். அலுவலகத்தில் இலவச உணவு போன்ற சலுகைகள் வழங்கப்படாது. ஏனெினல் வருவாயை கூட்டவில்லை எனில் கம்பெனி திவாலாவதை யாராலும் தடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என கூறி உள்ளார்.