சமூக நீதியை சிதைக்க அனுமதிக்க மாட்டோம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது – இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப் பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.

இதுகுறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையைப் போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்.
சமூகநீதித் தத்துவத்தைக் காக்கத் தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, தி.மு.க. சார்பில் பொன்முடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பி.வில்சன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு, ம.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைகோ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முத்தரசன் மற்றும் நா.பெரியசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.நாகைமாலி மற்றும் மா.சின்னதுரை, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் ப.அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் மற்றும் சூரியமூர்த்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தமிழக அரசின் தீர்மானத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

மத்திய அரசு அவசர அவசரமாக பத்து சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாஜகவுக்கு சமூக நீதி கொள்கையில் நம்பிக்கை இல்லை. மேலும், பத்து சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது. பத்து சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.