எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக செயல்படாத நிலையில் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கட்சிக்கான பிரத்யேக இணையதளத்தை தொடங்கி வைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் கூறியதாவது:-
திமுகவை எதிர்ப்பதற்காக வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் அமமுக கூட்டணி அமைக்கும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட, அதிமுக கூட்டணியில் இருக்க அமமுக ஒப்புக்கொண்டது. ஆனால் ஒரு சிலரின் சுயநலத்தால் கூட்டணி அமையவில்லை. அதனால் திமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது அதிமுக என்ற கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. தேர்தல் வந்தால் ஒரு கட்சிக்கு ஏ மற்றும் பி பார்ம் தர வேண்டும். இன்று அதிமுகவின் நிலைமை மோசமாக உள்ளது. அதேநேரம் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அதிமுக பற்றி பேசுவதற்கு கருத்து ஒன்றும் இல்லை. இதுதான் யதார்த்தம்.
உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு, தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்பட வேண்டும். எல்லா சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு.
வடகிழக்கு பருவமழை இப்போது தான் தொடங்கியுள்ளது. சீர்காழியில் யாரும் எதிர்பார்க்காதவாறு கனமழை பெய்துள்ளது. தமிழக அரசு சரிவர செயல்பட்டு மக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம். அமமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே விடுதலை குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அதேபோல் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஆளுநர் தேவையில்லை. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற அண்ணாவின் நிலைப்பாடே அமமுகவின் நிலைப்பாடு. சனாதனம், பாரத், அரசமைப்பு சட்டத்தை விட பெரியது பாரத் என்றெல்லாம் ஆளுநர் பேச வேண்டியதில்லை. வேறு வேலையில்லாமல் ஆளுநர் பேசுகிறார். அவர் பேசுவதை அவர் வீட்டில் உள்ளவர்களே கேட்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.