போலந்து மீது ரஷ்ய ஏவுகணை விழுந்ததாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகின்றது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இணையவில்லை என்றாலும் நேட்டோவால் உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உக்ரைன் – போலந்து எல்லையில் போலந்து நாட்டின் பகுதியில் இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் விழுந்ததாகவும், இதில் இரண்டு போலாந்து மக்கள் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலந்து அதிபருடன் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், அனைத்து உதவிகளும் நேட்டோ தரப்பில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்றுள்ள நிலையில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் பைடன் ஈடுபட்டார். ஆலோசனையின் முடிவில் நேட்டோ மற்றும் ஜி7 கூட்டமைப்பு வெளியிட்ட கூட்டறிக்கையில், ஏவுகணை தாக்குதல் குறித்து போலாந்தின் விசாரணைக்கு முழு ஆதரவை அளிப்பதாகவும், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போலாந்தில் உள்ள நேட்டோ ராணுவத் தளம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் போலந்து மீது விழுந்த ஏவுகணை ரஷ்யப் படையினர் வீசப்பட்டது இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உக்ரைன் மீது நேற்று இரவு நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ரஷ்யப் படையினர் தீவிர தாக்குதலை மேற்கொண்டனர். இதில், உக்ரைன் – போலந்து எல்லையில் போலந்து நாட்டின் பகுதியில் இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் விழுந்ததாகவும், இதில் இரண்டு போலந்து மக்கள் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலந்து மீது விழுந்த ஏவுகணைகள் ரஷ்யாவை சேர்ந்தது என்று அந்நாடு குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் ரஷ்யா மறுத்தது.
நேட்டோ கூட்டமைப்பின் கீழ் இருக்கும் ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ‘நேட்டோ சட்டப் பிரிவு 5-ஐ’ பயன்படுத்தி தாக்குதல் நடத்திய நாட்டின் மீது நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் தாக்குதல் நடத்தலாம் என்ற விதிமுறை உள்ளது.
இந்நிலையில், முதல்கட்ட விசாரணை மேற்கொண்டதில் போலந்தில் விழுந்த ஏவுகணைகள், ரஷ்ய – போலந்து பாதையில் ஏவப்பட்டதற்கான வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யத் தாக்குதலை தடுக்க உக்ரைன் படையினர் பயன்படுத்தியதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, முழு விசாரணை முடிவடைந்த பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து நேட்டோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.