பிகார் மாநிலம் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த சுனிதா தேவி, தனது இரண்டு சிறுநீரகங்களையும் திருடிக் கொண்டு உயிரை ஊசலாடவிட்ட மருத்துவரின் சிறுநீரகங்களை எடுத்து தனக்குப் பொருத்துமாறு வலியுறுத்தி வருகிறார்.
செப்டம்பர் மாதம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்ற சுனிதா தேவிக்கு அறுவை சிகிச்சை செய்து இரண்டு சிறுநீரகங்களும் திருடப்பட்டது அண்மையில் தெரிய வந்தது. 38 வயதாகும் சுனிதா தேவி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக டயாலிஸிஸ் செய்துகொண்டு வருகிறார்.
தனக்கு நேர்ந்த துயரம் குறித்து பேசிய சுனிதா, உடனடியாக இந்த மோசடியில் ஈடுபட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டு, அவரது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு, எனக்குப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவரின் சிறுநீரகங்கள் பொறுத்தப்பட்டால்தான் என்னால் உயிர்பிழைக் முடியும் என்கிறார். இப்படி செய்தால் மட்டுமே, அடுத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு இது உகந்த பாடமாக இருக்கும் என்றும், பணத்துக்காக ஏழைகளின் உயிரோடு விளையாட மாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை கவனித்துக் கொள்வதற்காக நான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று கூறும் சுனிதா, கருப்பை பிரச்னைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது அறுவை சிகிச்சை செய்து இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவர்கள் அகற்றிவிட்டதாகவும், அதன்பிறகு தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தெரிய வந்ததாகக் கூறுகிறார்.
குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் தலைமறைவாக இருக்கிறார். அவரைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தான் ஏழை என்பதால், எனது பிரச்னையை மாநில அரசு கவனிக்கவில்லை என்று ஒருநாள் விட்டு ஒரு நாள் டயாலிசிஸ் செய்தால் மட்டுமே தான் உயிரோடு இருக்க முடியும் என்கிறார் வேதனையோடு.