கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கிய நிலையில், கடந்த வாரத்தில் உச்சத்தை எட்டியது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்தது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழியில் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையே சீர்காழியின் பல்வேறு பகுதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கினார். அதேபோல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறியதாவது:-
கனமழையால் சீர்காழி பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின், இன்று ஆட்சிக்கு வந்தபின் எவ்வளவு கொடுத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதில், மூன்றில் ஒரு பங்கு நிவாரணம் கூட இப்போது முதலமைச்சராக இருக்கும்போது அறிவிக்கவில்லை. மயிலாடுதுறையில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.14 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அறுவடை செய்தால் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கும். இதனால் முதல்வர் ஸ்டாலின், ரூ.10 ஆயிரம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகளின் கோரிக்கை தான் பாஜகவின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல் பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய கோரிக்கை பல்வேறு தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதனை மத்திய அரசிடம் தமிழக பாஜக எடுத்து செல்லும். அதேபோல் பயிர் காப்பீட்டுக்கான முழுமையான தொகை விவசாயிகளுக்கு கிடைப்பதற்காக கருப்பு முருகானந்தம் தலைமையிலான பாஜக குழு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வலியுறுத்தும். மாநில அரசு இன்னும் அதிகபடியான நிவாரணத்தை வழங்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இதன் தாக்கம் தெரியும். ரேஷன் கார்டுக்கு ரூ.1000 என்பது போதாது. இழப்பீடு தொகையை மாநில அரசு அதிகமாக வழங்க வேண்டும் என்றார்.
பின்னர் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து பற்றிய கேள்விக்கு, இதில் அரசியல் செய்யவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கூறியவர் மு.க.ஸ்டாலின். இதனால் மக்களின் குறைகளை எடுத்து அரசுக்கு கூறுகிறோம். அதனால் அரசியல் செய்வது முதல்வரா அல்லது எதிர்க்கட்சிகளா என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் மாநில அரசு போர்க்கால அடிப்படையில் பணி செய்கிறதா என்பதே எங்கள் கேள்வி. ஏனென்றால் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருமழை சீர்காழியில் பெய்துள்ளது. மாநில அரசு சுதாரித்து பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை மாநில அரசு சரியாக செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.