போலந்தின் பெருநகரங்களில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி படையெடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரில் இரு நாடுகளின் வீரர்களும் பெருமளவில் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இரு நாடுகளையும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தூதரக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன. எனினும், போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போரில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட பல நகரங்கள் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்தன. கட்டிடங்கள் உருக்குலைந்து போயின. எனினும், பல நகரங்களை ரஷ்யாவின் பிடியில் இருந்து உக்ரைன் மீட்டது. இதன்படி சமீபத்தில், ரஷ்ய படையிடம் இருந்து கெர்சன் நகரை உக்ரைன் மீட்டது. தொடர்ந்து கடுமையாக சண்டை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறும் அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டு அதன் படைகள் வெளியேறின. இந்த நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டின் மீது ரஷ்ய ஏவுகணைகள் மழையாக பொழிந்துள்ளன. போலந்தின் 12-க்கும் மேற்பட்ட பெரிய நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடந்த சப்தங்கள் எழுந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்தில் போலந்து நாட்டில் குடிமக்களில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து போலந்து அதிபர் ஆண்டிரெஜ் துடா மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இருவரும் அவசர பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என போலந்து அதிபர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதேபோன்று அதிபர் பைடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், போலந்து அதிபர் துடாவிடம் பேசியுள்ளேன். போலந்தின் கிழக்கே மக்கள் உயிரிழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டேன். இந்த குண்டுவெடிப்பு பற்றிய விசாரணைக்கு போலந்துக்கு முழு ஆதரவை வழங்குவோம். அடுத்து எடுக்க வேண்டிய முறையான நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய தொடர்ந்து நாங்கள் போலந்துடன் தொடர்பில் இருப்போம் என அவர் தெரிவித்து உள்ளார்.