ஆர்டெமிஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1969-ம் ஆண்டு முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது அந்த திட்டத்தின் இலக்காகும். இதில் முதல்படியாக, மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டது. இந்த திட்டம் ‘ஆர்டெமிஸ்-1’ என அழைக்கப்படுகிறது. அதன்படி எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவதற்கான முதல் முயற்சி கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு, எரிபொருள் கசிவு மற்றும் சூறாவளி தாக்கும் அபாயம் போன்ற காரணங்களால் ‘ஆர்டெமிஸ்-1’ திட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓரியன் விண்கலத்துடன் எஸ்.எல்.எஸ். ராக்கெட்டை நிலவுக்கு அனுப்பும் முயற்சியை நாசா நேற்று மீண்டும் கையில் எடுத்தது. அப்போது ராக்கெட்டில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவானது. எனினும் நாசா என்ஜினீயர்கள் எரிபொருள் கசிவை சரிசெய்தனர். அதை தொடர்ந்து நீண்ட போராட்டத்துக்கு பின் எஸ்.எல்.எஸ். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல்.எஸ். ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் படியான ‘ஆர்டெமிஸ்-1’ திட்டத்தில் நாசா வெற்றிப்பெற்றுள்ளது.
9 மணி நேர பயணத்திற்கு பின், சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. 1972-ம் ஆண்டுக்கு பின், நிலவுக்கு செல்லும் விண்கலம் ஒன்று பூமியை புகைப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. வரும் நவம்பர் 21 மற்றும் 25-ம் தேதி, நிலவின் மேற்பரப்புக்கு அருகில், சுமார் 60 மைல் தொலைவில் செல்லும் ஓரியன் விண்கலம், டிசம்பர் 11-ம் தேதி பூமிக்கு திரும்பவுள்ளது.