பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி முதல்முறையாக சந்தித்து பேசினார். இரு தரப்பு வர்த்தக, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் மோடி ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாட்டின் மத்தியில் உறுப்பு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதில் ஆர்வம் காட்டினார். நேற்று முன்தினம் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில், சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல் முறை ஆகும். அவர்கள், பரந்த அளவிலான இந்திய, இங்கிலாந்து நாடுகளின் விரிவான மூல உபாய கூட்டாண்மை மற்றும் எதிர்கால உறவுகளுக்கான வரைவுத்திட்டம்-2030-ல் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி திருப்தி தெரிவித்தனர். ஜி-20, காமன்வெல்த் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பலதரப்பு அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் பாராட்டினர். அவர்கள், இரு தரப்பு வர்த்தகம், ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி கூறும்போது, “பாலியில் பிரதமர் ரிஷி சுனக்குடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய, இங்கிலாந்து உறவுகளுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. நாங்கள் வர்த்தக தொடர்புகளை அதிகரிக்கவும், இந்திய பாதுகாப்பு சீர்திருத்தங்களின் பின்னணியில் ஒத்துழைப்பின் நோக்கத்தை அதிகரிப்பது, மக்கள் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம்” என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்துப்பேசினார். அப்போது இரு தலைவர்களும், பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற பல்வேறு துறைகளில் தற்போதைய ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் பிரதமர் மோடி கூறும்போது, “இந்தியா-பிரான்ஸ் உறவுகள், உலகளாவிய பெரும் நன்மைக்கான சக்தி ஆகும்” என தெரிவித்தார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடனான சந்திப்பு எப்போதும் போல் ஒரு சிறந்த சந்திப்பாக அமைந்தது. பாதுகாப்பு, அணுசக்தி, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் ஆழமான விவாதங்களை நடத்தினோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சையும் பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் இந்த ஆண்டில் 3-வது முறையாக சந்தித்துப் பேசினர். இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையேயான பரந்த அளவிலான இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர். வர்த்தக, முதலீட்டு உறவுகளை வளர்க்கவும், ராணுவம், இடம்பெயர்வு, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிற முக்கிய பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.

‘ஜி-20’ நாடுகள் உச்சி மாநாடு நேற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து தனது இந்தோனேசிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். முன்னதாக தனக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்காக அவர் இந்தோனேசிய மக்களுக்கும், அந்த நாட்டு அரசுக்கும், அதிபர் ஜோகோ விடோடோவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.