ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் தடைக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. தமிழக அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் 23ல் துவங்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கை மனுவை நிராகரித்து, ஏற்கனவே அறிவித்தபடி நவ., 23ல் விசாரணை துவங்கும் என உத்தரவிட்டனர்.