சிறையில் அடைக்கப்பட்டதால் எனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது: சஞ்சய் ராவத்!

சிறையில் அடைக்கப்பட்டதால் தனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினரும், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத், மும்பையின் கோரேகானில் உள்ள பத்ரா சால் குடியிருப்பினை கடந்த 2008ம் ஆண்டு மறுவடிவமைப்பு செய்ததில் சுமார் ரூ.1,034 கோடி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அவரை கைது செய்து, ஆர்தர் ரோடு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ரூ.112 கோடி பண மோசடி செய்ததாக சஞ்சய் ராவத் உதவியாளர் பிரவீன் ராவத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில், ரூ.1.06 கோடி சஞ்சய் ராவத்துக்கும், அவரது மனைவி வர்ஷா ராவத்துக்கும் பல்வேறு வழிகளில் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை, அவர் மீது துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் சஞ்சய் ராவத் ஜாமீன் மனு மீதான விசாரணை, கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அப்போது, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத்துக்கு, மும்பையில் உள்ள பண பரிவர்த்தனை தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி சிறப்பு உத்தரவிட்டது. சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் விடுதலை ஆனதை தொடர்ந்து, எம்பி சஞ்சய் ராவத் மும்பையில் இயங்கிவரும் தனியார் தொலைகாட்சி நிறுவனத்திற்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சூரிய ஒளியைக் கூட பார்க்க முடியாதவாறு சிறையில் அடைக்கப்பட்டேன். அதனால் எனது பார்வை திறன் பாதிப்பிற்குள்ளானது. இப்போது எல்லாம் என்னால் சரியாக பார்க்கவோ, படிக்கவோ முடிவதில்லை. கேட்கும் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதிலிருந்து மீண்டு வருவேன். சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து 10 கிலோ வரை எடை குறைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக் அவர்களை சிறையில் வைத்து பார்த்தேன். அவரது உடல்நிலையும் மோசமாகியுள்ளது.

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தியின் கருத்து, தங்களுடைய மகாராஷ்டிராவின் மஹா விகாஸ் அகாடி கூட்டணியை பாதிக்கும். மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களே, ராகுல் காந்தியின் கருத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரையின் அஜெண்டா சாவர்க்கர் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து பேசியிருக்க கூடாது. மாநில மக்கள் சாவர்க்கர் மீது மதிப்பு வைத்துள்ளனர். பாஜக பிராடுதனத்தை செய்து கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ், பாஜகவினரோடு சாவர்க்கர் எப்போதும் இணைந்து செயல்பட்டது கிடையாது. சாவர்க்கரை பல முறை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களே விமர்சித்து இருக்கிறார்கள். இப்போது அரசியல் லாபத்திற்காக சாவர்க்கர் குறித்து பேசிவருகின்றனர். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.