காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நினைத்து வியந்து கொண்டே இருக்கிறேன் என கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்படுகிறது. கடந்த 17ம் தேதி காசி தமிழ்சங்கமம் தொடங்கினாலும் கூட முறைப்படி நவம்பர் 19ம்தேதியான நேற்று தான் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல் முருகன் வரவேற்பு உரையாற்றினார். இதையடுத்து இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காசி நகருக்கும், தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை பலரும் இங்கு விளக்கி பேசினார்கள். பாரதியார் இங்கே 2 வருடம் படித்திருக்கிறார். இங்கே படித்து அவர் கற்றுக்கொண்டதை புலவர் பெருமக்களிடம் உரையாடி விவாதத்தில் பங்கு கொண்டதை நேரிலேயே பார்த்திருந்து காசி நகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் என்று இந்தியாவுக்கு எந்தவிதமான முன்னேற்றம் இல்லாதபோதே அவர் அந்த பாடலை பாடியுள்ளார்.
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் எனவும், வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் வருவதற்கு முன்பே வெறும் 22 வயதில் அவன் பாடிவிட்டு போய்விட்டான். அப்படியான பாரதியார் 9 வயது முதல் 11 வரை 2 ஆண்டுகள் வரை இங்கு இருந்து பயின்று அவர் அறிவு பெற்றிருக்கிறார் என்பது அறியவேண்டிய விஷயமாகும்.
அதேபோல் நீங்கள் அறியாத, இதுவரை குறிப்பிடப்படாத விஷயத்தை இங்கு கூற விரும்புகிறேன். கபீர் தோஹாவளி பாடினார். இது 2 அடிகளிலேயே பாடுவது. நம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் திருக்குறளை 2 வரிகளில் இயற்றினார். தோஹாவளியில் 8 சீர்கள் அமைந்துள்ளன. திருக்குறளில் 7 சீர்கள் தான். முதல் அடியில் 4 சீர்கள், 2வது அடியில் 3 சீர்கள் உள்ளன. இதனை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இந்த 2 வரியில் கபீர் தாஸ் ஆன்மிகம் குறித்து பாட, திருவள்ளூர் 2 அடியில் உலக இயல்கள் பற்றி முப்பால்களில் 1,330 குரல்களில் எழுதியுள்ளார்.
கர்நாடக சங்கிதத்தின் மாமேதை என போற்றப்படும் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் இங்கே வந்து பல இடங்களில் பாடியுள்ளார். கங்கை நதியில் மூழ்கி எழும்போது கையிலேயே சரஸ்வதி தேவி வீணையை பரிசளித்து இருக்கிறார். இந்த வீணை இன்னும் கூட உள்ளது. அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட பெருமை மிகுந்த காசி நகரிலேயே காசி தமிழ் சங்கமத்தை நடத்த வேண்டும் என்பது எப்படி நமது பிரதமருக்கு தோன்றியது என நினைத்து மிகவும் வியந்து.. வியந்து.. வியந்து.. வியந்து கொண்டு இருக்கிறேன். மோடியை கும்பிட்ட இளையராஜா I Cant express my feeling fully, because the thought you have made Tamil Sangamam in this Punniyaboomi(பிரதமர் மோடியை நோக்கி கும்பிட்ட, மோடியும் இளையராஜாவை நோக்கி கையெடுத்து கும்பிட்டார்) காசியிலேயே நடத்துவதற்கு எப்படி இந்த ஆலோசனை வந்தது என்பதை நினைத்து வியந்து வியந்து மகிழ்கிறேன். எல்லா வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த புகழும் வழங்க மேன்மேலும் ஓங்குக என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.