ஏவுகணை வீசியதை மகளுடன் ரசித்த வடகொரியா அதிபர் கிம்!

வடகொரியா வீசிய ஏவுகணையை தனது மகளுடன் அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிடுவதை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து ஏவி மிரட்டி வரும் வடகொரியா, கடந்த சில நாட்களுக்கு முன் அணு ஆயுத திறன் கொண்ட ஹவாசோங்-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது. இது, அமெரிக்காவையும் தாக்கக் கூடியது. ஒவ்வொரு ஏவுகணை சோதனையையும் நேரில் பார்வையிட்டு வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முதல் முறையாக தனது மகளுடன் ஏவுகணை தளத்துக்கு வந்து, ஏவுகணை ஏவுதலை பார்த்தார். இந்த புகைப்படத்தை அந்நாட்டு அரசு ஊடகமும் வெளியிட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வடகொரியாவை ஆண்டு வரும் உன் குடும்பத்தின் 4வது தலைமுறைதான் அவருடைய மகள். அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் தெரியாது. ஆனால், தென் கொரிய ஊடகங்கள், கிம் 2009ல் ஒரு முன்னாள் பாடகரான ரியை திருமணம் செய்து கொண்டதாகவும், தம்பதியருக்கு 2010, 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் பிறந்த மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. இதில் எந்த குழந்தையை அவர் ஏவுதளத்துக்கு அழைத்து சென்றார் என்பது தெரியவில்லை. அதிபர் தனது குழந்தையுடன் இருக்கும் படத்தை அரசு ஊடகமே வெளியிடுவது இதுவே முதல்முறை. இதன்மூலம், தனக்கும், தனது தங்கைக்கும் பிறகு, அடுத்த தலைமுறை தலைவரை உருவாக்கும் அரசியல் பயிற்சியில் உன் ஈடுபட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

கிழக்காசிய நாடான வட கொரியா, ஒரு மர்மப் பிரதேசமாகவும், இரும்புத் திரை போர்த்திய நாடாகவும் உள்ளது. இங்கு நடக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும்.

இது குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த, வட கொரிய அரசியல் விவகாரங்களுக்கான நிபுணர் மைக்கேல் மேடன் கூறியதாவது:-

இந்த சிறுமி, கிம் ஜோங் உன்னின் மகளாகத் தான் இருக்க வேண்டும். தன் குடும்பம் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை ரகசியமாக வைக்கும் கிம், தன் மகளை முதல் முறையாக வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் என்றால், அதற்கு பின்னணியாக ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்கும். தனக்குப் பின், வட கொரியாவின் தலைமைப் பொறுப்புக்கு தன் மகள் வர வேண்டும் என அவர் விரும்புவதாக தெரிகிறது.

இந்த சிறுமி படிப்பை முடித்த பின், சில காலம் ராணுவ பயிற்சி அளித்து, நாட்டின் தலைமைப் பொறுப்பை தன் மகளிடம் கொடுக்க, கிம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பொது நிகழ்ச்சியில், அதுவும் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சியில் தன் மகளை அவர் அறிமுகப்படுத்தியதன் வாயிலாக, உலக நாடுகளுக்கு கிம் ஏதோ ஒரு முக்கிய செய்தியை சொல்ல வருவதாகவே தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.