அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக உள்ளது: கே.எஸ்.அழகிரி

அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக உள்ளது எனவும், அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அதிமுக பெற முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்தத்தை, மதவெறி தாக்குதல்களை தடுப்பது என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்து எங்கள் கூட்டணி பயணிக்கிறது. அதிமுகவால் இந்த கொள்கையை எப்போதும் ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை இயக்கப்போவது மோடி மற்றும் அமித்ஷா தான். அதிமுக தற்போது பாஜக மோடியின் மறுஉருவமாக உள்ளது. அதிமுக வேறு இயக்கத்தில் நடித்துதான் வருகிறது. அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அக்கட்சி மீண்டும் பெற முடியாது.

காசி தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வில் மோடி பங்கேற்றிருந்தாலும் பாஜக அதனை உரிமை கொண்டாட முடியாது. தமிழ்நாடு அறநிலையத் துறை செலவு செய்து 200 பேரை காசிக்கு அனுப்பியுள்ளது. நியாயமாக தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு தான் அந்த பெருமை சேரும். பாஜக இதில் உரிமைக் கொண்டாட நினைப்பது வாடகை வீட்டுக்கு உரிமை கொண்டாடுவது போல் ஆகும்.

ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வதால் மக்களிடம் உள்ள வரவேற்பைப் பார்த்து பலர் அச்சத்தில் மிரண்டுபோய் உள்ளனர். அவரை தடுத்து நிறுத்தவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.