மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: மு.க.ஸ்டாலின்

மாற்றுத்தினாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

கோபாலபுரம் என்பது தமிழ்மொழிக்கும் தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இன்னும் சொன்னால் இந்திய துணை கண்டத்திற்கே ஒரு தலையாய இடமாக, மறக்க முடியாத இடமாக வரலாற்றில் விளங்கி கொண்டிருக்கிறது. உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டி வாஞ்சையோடு அழைத்தவர்தான் நம்முடைய தலைவர் கருணாநிதி. இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தைதான் அவர். தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையிலான கருவிகள் 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நகர பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணம் இல்லாமல் பயணம். 1,096 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென 2021-2022-ம் நிதியாண்டில் 813 கோடியே 63 லட்சம் ரூபாயும் 2022-2023 நிதியாண்டில் 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் உலக வங்கி உதவியுடன் 6 ஆண்டு காலத்திற்கு 1,702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்திட்டத்தின் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியையும் பரிசுத்தொகையாக, பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கும் முறையை மாற்றி முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்று சொல்வார்கள். நாட்டில் எப்படி மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். எப்போது ஆட்சிக்கு வந்தோமோ அப்போதிலிருந்து விடாமல் பெய்து கொண்டிருக்கிறது, ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா, அந்த கொடிய நோயில் இருந்து சிறிது மீண்டு வந்தோம். வந்தவுடன், பார்த்தீர்களென்றால் மழைதான். பத்துநாள் கூட இடைவெளி இல்லை, பெய்து கொண்டேதான் இருந்தது.

வேடிக்கையாக ஒரு செய்தி சொல்கிறேன், உண்மை செய்தி சொல்கிறேன். என்னவென்றால், 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, நான் மேயராக பொறுப்பிற்கு வந்தேன். முதன்முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக நான்தான் பொறுப்பிற்கு வந்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும், சென்னை மாநகர மேயராக வந்தபோது, வந்தவுடன் அடுத்த நிமிடமே மழை ஆரம்பித்தது, இருபது நாட்கள் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது, எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் நாங்கள் பார்த்து சீர்படுத்தி கொண்டிருந்தோம். அப்போது முதல்-அமைச்சர் கருணாநிதியும், நானும் பார்வையிட வேண்டும், மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று சொன்னார். உடனே மாநகராட்சி வாகனத்தில் கருணாநிதியை அழைத்துக்கொண்டு, சென்னை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். காரில் போய்க் கொண்டிருக்கும்போது வேடிக்கையாக சொன்னார், ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்தால், மழை பேயராக இருக்கிறது என்று சொன்னார்.

அதுபோல, இப்போது குடிநீர் பிரச்சினையே இல்லை. அந்த அளவுக்கு மழையும் பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையை எப்படி சமாளித்துக் கொண்டிருக்கிறோம்? ஏற்கனவே கடந்த ஆண்டு மழை பெய்தபோது என்ன நிலை? அதுவும் உங்களுக்கு தெரியும். இப்போது என்ன நிலை? நாங்கள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. 80 முதல் 95 சதவீதம்தான் முடித்திருக்கிறோம், அதற்கே மக்களிடம் இருந்து பாராட்டு வருகிறது. இன்னும் பணிகள் இருக்கிறது. அதையும் வரக்கூடிய காலகட்டத்தில் செய்து முடிப்போம். மக்களுக்கு சேவை செய்வதன் மூலமாக உடல் நலிவு ஏற்பட்டாலும். அதைப்பற்றி கவலைப்படாமல் நான் இன்றைக்கு என்னுடைய பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

ஏழையின் சிரிப்பிலே இறைவனை காண்போம் என்று அண்ணா சொன்னார். நான் இப்போது சொல்கிறேன், ஏழையின் சிரிப்பிலே கருணாநிதியை காண்போம், அண்ணாவையும் காண்போம் என்ற நிலையில் நம்முடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோர் விழாவில் பேசிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு அறக்கட்டளை தலைவர் சிம்மசந்திரன், ‘மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை குறித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘சிம்மசந்திரன் பேசுகிறபோது எல்லாவற்றையும் நிறைவேற்றி கொடுத்து விட்டீர்கள், இன்னும் கோரிக்கைகள் இருக்கிறது என்று சொன்னார். அந்த கோரிக்கைகள் குறித்தும் (மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை) ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அறிவித்துவிட்டு போய்விடலாம், அதை நிறைவேற்ற வேண்டும். அதுதான், தி.மு.க. ஆட்சி, அந்தநிலையில் இருந்து, நிச்சயம் அதையும் நிறைவேற்றி தருவோம்’ என்றார். விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.