தமிழக அரசால் முடியவில்லை என்றால் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நடத்திக்கொள்கிறோம் என கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கூடலூர், நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்களை (டேன்டீ) வனத்துறையிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது கூறியதாவது:-
1823-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பிரிட்டிஷ் கம்பெனிகள் தலைமன்னார் வழியாக இலங்கைக்கு தமிழர்களை வேலைக்காக அழைத்து சென்றனர். அங்கு பல்வேறு சிரமங்களுக்கிடையே பணியாற்றினர். 1948-ம் ஆண்டு இலங்கை சுதந்திரத்துக்கு பிறகு 10 லட்சம் தமிழர்களை அகதிகளாக கருதி குடியுரிமை பறிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1963-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி- சிறிமாவோ பண்டாரநாயகா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு 5 லட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் குறைந்த சம்பளத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தீப்பெட்டி போல் வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தை மூட 5,315 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது டேன்டீ குடியிருப்புகளை விட்டு கட்டாயம் வெளியேற்றும் வகையில் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதை பா.ஜ.க. பார்த்துக்கொண்டிருக்காது.
இன்றைக்கு கூட தாயகம் திரும்பிய தமிழர் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து மேடையில் பேசுகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பல அறைகளுடன் கூடிய 60 ஆயிரம் வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி கட்டிக்கொடுத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் தாயகம் திரும்பிய தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக திராவிட மாடல் அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா அரசியல்வாதிகளுமே தூங்கி எழுந்தா பேசக் கூடியது இலங்கை பிரச்சனை மட்டும்தான். இங்கே ஒரு அரசியல்வாதி சொல்வாரு.. நான் ஆமைக்கறி சாப்பிட்டேன்.. இன்னொரு அரசியல்வாதி சொல்வாரு.. நான் கள்ளத்தோணி ஏறிப் போனேன்.. இன்னொரு அரசியல்வாதி சொன்னாரு.. பிரபாகரன் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.. இதெல்லாம் தமிழக அரசியல்வாதிகளின் தினப் பேச்சு. டேன்டீ நிறுவனத்தை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நடத்திக்கொள்கிறோம். கூடலூருக்கு வருகிறேன் என்றதும் 778 பேருக்கு வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. இன்றைக்கு டேன்டீ நஷ்டம் என கூறி திராவிட மாடல் அரசு தனியார் கம்பெனிக்கு கொடுக்க வாய்ப்புள்ளது. அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் டேன்டீ தூளை விற்பனை செய்தால் ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். இதன் மூலம் அனைவருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரி எல்.முருகனை மாதந்தோறும் 5 நாட்கள் நீலகிரியில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டுமென தெரிவித்துள்ளார். வருகிற ஜனவரி மாதம் நீலகிரியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மீண்டும் நேரில் வந்து மக்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.