ஆதார் இணைத்தால் தான் மின் கட்டணம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்: அன்புமணி

ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுஒருபுறமிருக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக் கூடாது.

ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எதற்காக இணைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையானோருக்கு தெரியவில்லை. அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்.

ஆதாரை இணைப்பதற்கு குறைந்தது இரு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதற்குள்ளாக மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும் போது, பயனாளிகளின் ஆதார் அட்டையை பெற்று அங்கேயே இணைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.