தமிழர்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முதல் விசாரணை நடத்த உள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் காட்சிபடுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடத்தப்பட்ட கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவால் 2017-ல் ஜல்லிக்கட்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 2017-ம் ஆண்டு தமிழர்களின் இந்த கொந்தளிப்பை உலகையே உலுக்கிய மக்கள் புரட்சியாக உருவெடுத்தது. 2017-ம் ஆண்டு சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் சிலரால் போராட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் வீறு கொண்டு நடந்தன. தமிழகத்தின் வீதிகள் தோறும் ஜல்லிக்கட்டுக்காக போர்க்கோலம் பூண்டன. சென்னை மெரினாவில் பல நாட்களாக இரவும் பகலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்கு நடத்த கோரி போராட்டம் நடத்தினர். மெரினாவில் நடைபெற்ற இந்த புரட்சியானது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. துளி வன்முறையும் இல்லாமல் மக்கள் சாரை சாரையாக போராட்ட களத்திலேயே வாழ்க்கையை நடத்திய மகத்தான நாட்கள் அவை. மக்களின் இந்த கிளர்ச்சியால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் தர மக்கள் புரட்சி வென்று தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தே ஆக வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட தமிழர் விரோத அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக பல்வேறு தமிழின விரோத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன. இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவ்வழக்குகள் மீதான விசாரணை இன்று முதல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்தது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க முடியாது என கூறி தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் மதுரை தொகுதியின் எம்பி என்ற வகையில் தம்மையும் சேர்க்க வேண்டும் என லோக்சபா எம்பி சு.வெங்கடேசன் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதேபோல அதிமுக ஓபிஎஸ் கோஷ்டியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் தேனி எம்.பி. ரவீந்தரநாத் ஆகியோரும் தங்களை இவ்வழக்கில் சேர்க்க இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.